ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை

 

ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே   

 

-திருமூலர்

 

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

 

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

கணபதி என்றிடக் கரும மாதலால்

கணபதி என்றிடக் கரும மில்லையே   

 

-திருமூலர்

 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்

 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றுந்தா   

 

-ஒளவையார்

 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்

 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனிகிடங்காது-பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு. 

 

-ஒளவையார்

 

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

 

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணி விப்பான்-விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்

கண்ணிற் பணிமின் கனிந்து.

 

-கபிலர்

 

விநாயகர் துதி

 

அரோகரா

 

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!

பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே

சங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சம்கரிக்கும்

எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

 

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி

ஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து

எப்பொழுதும் வணங்கிடவே எமையாள வேண்டுமென

அப்பனவன் மடியமரும் அருட்கனியே கணபதியே!

 

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்கும் உக்கியிட்டு

எள்ளளவும் சலியாத எம்மனத்தை உமக்காக்கித்

தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றோம்

உள்ளியதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே

 

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்

நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீஎழுந்து

என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க

பொன்வயிற்றுக் கணபதியே போற்றியெனப் போற்றுகின்றோம்!

 

-துர்கை சித்தர்

 

பிள்ளையார் வணக்கம்

 

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் அருளைத் தரும் பிள்ளையார்

 

ஆற்றங்கரை ஓரத்திலே அரசமரத்து நிழலிலே

வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

 

ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார்

நேரும் துன்பம் யாவையும் தீர்த்து வைக்கும் பிள்ளையார்

 

மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்

அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்

 

அவல்பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்

கவலையின்றி உண்ணுவார் கண்ணைமூடித் தூங்குவார்.

 

கலியுகத்தின் விந்தையைக் காண வேண்டி அனுதினம்

எலியின் மீது ஏறியே இஷ்டம் போல சுற்றுவார்.

 

தொந்தி கணபதி

 

தொந்தி கணபதி வா வா வா

வந்தே ஒரு வரம் தா தா தா    

 

கந்தனின் அண்ணா வா வா வா

கனிவுடன் ஒரு வரம் தா தா தா

பானை வயிற்றுடன் வா வா வா

பணிந்தேன் ஒரு வரம் தா தா தா (தொந்தி)

 

குள்ள குள்ளனே வா வா வா

குண்டு வயிறனே வா வா வா

ஆனை முகத்துடன் வா வா வா

அவசியம் ஒரு வரம் தா தா தா   (தொந்தி)

 

ஓம் கணேச

 

ஓம் கணேச ஓம் கணேச

ஓம் கணேச பாஹிமாம்

ஓம் கணேச ஓம் கணேச

ஓம் கணேச ரக்ஷ்மாம்

 

ஜெய கணேச ஜெய கணேச

ஜெய கணேச பாஹிமாம்

ஜெய கணேச ஜெய கணேச

ஜெய கணேச ரக்ஷ்மாம்

 

ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச

ஸ்ரீ கணேச பாஹிமாம்

ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச

ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்

 

ஜெய கணேச பாஹிமாம்

ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்

ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்

ஜெய கணேச பாஹிமாம்

 

கணேச சரணம்

 

கணேச சரணம் சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா

 

கதியென அருள்வாய் சரணம் கணேசா

கருணையின் வடிவே சரணம் கணேசா

 

சக்தியின் மைந்தா சரணம் கணேசா

சாஸ்தா குருவே சரணம் கணேசா

 

முதல்வனும் நீயே சரணம் கணேசா

முனிதொழும் தேவா சரணம் கணேசா

 

மூத்தவன் நீயே சரணம் கணேசா

மூஷிக வாகன சரணம் கணேசா

 

அகந்தையை அழித்திடும் சரணம் கணேசா

அன்பில் உறைந்திடும் சரணம் கணேசா

 

கஜமுகன் நியே சரணம் கணேசா

அடியார்க் கருள்வாய் சரணம் கணேசா

 

ஐந்து கரத்தோனே சரணம் கணேசா

வேழ முகத்தோனே சரணம் கணேசா

 

பார்வதி பாலகனே சரணம் கணேசா

பக்தருக் கருள்வாய் சரணம் கணேசா