ஆறுமுக சுவாமி விருத்தம்

 

ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும் அரோகரா

அலங்கார ஆபரண மணிந்த மார்பும்

திருமுகமும் வெண்ணீரும் புனைந்த மெய்யும்

ஜெகமெலாம் புகழ்படைத்தாய் சுப்பிரமண்யா

முருகாசர வணபவனே கார்த்தி கேயா

முக்கணனார் புத்திரனே உக்ர வேலா

இருவருமே உனைப்பணிந்தோம் பழநிவேலா

இதுசமயம் அடியாரை ரட்சிப் பாயே.1

 

மயிலேறி விளையாடும் சுப்பிரமண்யா

வடிவேலா உன்பாதம் நம்பி னேனே

உயிரிழந்து அபகீர்த்தி யாகும் வேளை

உன்செயலால் இதுசமயம் உயிரைக் காத்தாய்

தயவாக இனிமேலும் உயிரைக் காத்து

சண்முகனே அடியார்தம் துயரம் தீர்ப்பாய்

வைபோக மானமலை பழநி வேலா

வரமளித்து உயிர்காத்து ரட்சிப் பாயே.2

 

வருந்துமடியார் உயிரைக் காக்கும் தெய்வம்

வையகத்தில் வேறொரு வரில்லை யென்று

அறிந்துநான் உனைப் பணிந்தேன் சுப்பிர மண்யா

ஆதரித்து பிராணபயம் தீருமையா

திரிந்தலைந்து அறுமூன்று திங்களாகச்

சிறையிலிருந்து தளைப்பூண்டு சின்னமானேன்

பறந்துவரும் மயிலேறும் பழநி வேலா

பண்பாக உயிர்காத்து ரட்சிப் பாயே.3

 

பெருவேங்கை புலிபிடித்த பசுவைப் போல

பிதுர் கலங்கி மனம்தளர்ந்து புலம்பினோமே

இருவருமே உனைக்கூவச் செவி கேளாதோ

இதுசமயம் தாமதமா யிருக்க லாமோ

குருவாகித் தந்தை தாய் நீயேயாகில்

குமரேசா பிராணபயந் தீரு மையா

முருகேசா இதுசமயம் பழநி வேலா

முன்வந்து உயிர்காத்து ரட்சிப் பாயே.4

 

பாம்பின்வாய் சிக்கியதோர் தேரை போல

பதைபதைத்து வாடுகிறோம் பாலர்நாங்கள்

தேம்பியே புலம்புகிறோம் துயர மாகி

தென்னவனே உன்செவிக்கு கேளா தோதான்

நான்புவியில் உனைநம்பி மகிழ்ந் திருந்தேன்

நாயேனுக்கு அபாயம் வரநியாய மோதான்

சாம்பசிவன் புத்திரனே பழநி வேலா

சமயமிது உயிர்காத்து ரட்சிப் பாயே.5

 

வலையிலகப்பட்ட உயிரது போல் மயங்கு கிறோமே

வடிவேலா இதுசமயம் துயரம் தீர்ப்பாய்

கொலைகளவு பாதகங்கள் பொய்யிருந்த தெல்லாம்

கொடும்பழிகள் வஞ்சனை பில்லி சூனியமெல்லாம்

தொலையாத சிறுபிணிநோய் வல்வினை களெல்லாம்

துறந்து மையா மயிலேறும் சுப்பிரமணியா

மலையிலுறை வாசனே பழநி வேலா

வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே.6

 

நாகமது கெருடனைக்கண்டலைந்தாற் போல

நான்பயந்து அலைதுரும்பாய் அலைகிறேனே

தாகமது தீருமையா தவிக்கும் வேளை

சண்முகனே இதுசமயம் அடியேனுக்கு

மேகமது பயிர்க்குதவி செய்தார் போல

வேலவனே பிராணபயந் தீருமையா

வேகமுடன் வரவேணும் பழநி வேலா

வினைதீர்த்து உயிர்காத்து ரட்சிப்பாயே.7

 

பூனைகையில் சிக்கியதோர் கிளியைப் போல

புலம்புகிறோம் பிராணபயம் மிகவுமாகி

நானடிமை உனைநம்பி யிருக்கும் வேளை

நாயகனே பாராமுகமாய் இருக்க லாமோ

மானீன்ற வள்ளியம்மை தெய்வயானை

மணவாளா சரவணனே கருணை செய்வாய்

கானமயில் வாகனனே பழநி வேலா

கடவுளே உயிர்காத்து ரட்சிப்பாயே.8

 

தூண்டிலகப்பட்ட உயிரது போல் துடிக்கிறேனே

சுப்பிரமணியா இதுசமயம் அடியேனுக்கு

வேண்டும்வரம் கொடுப்பதற்குப் பார்த்து நீயே

வேறொரு வரில்லையென்று நம்பினேனே

மீண்டுவரும் வினைதீர்த்து துயரம் தீர்ப்பாய்

வேலவனே சூரசங்கார வேலா

ஆண்டவனே உனைப்பணிந்தோம் பழநி வேலா

அடியார்கள் உயிர்காத்து ரட்சிப் பாயே.9

 

நஞ்சுபட்டு விஷமேறி மயங்கு மாப்போல்

நடுநடுங்கி கிடுகி டென்று பயந்து நாங்கள்

தஞ்சமென்றே உனைப்பணிந்தோம் தணிகை வாசா

சற்குருவே பிராணபயந் தீரு மையா

பஞ்சகனைச் சிறைவிடுத்துத் தலையை வாங்கி

பரிகரித்து உன்னிருதாள் பதமே தந்து

வஞ்சனைகள் செய்யாமல் பழநி வேலா

வரமளித்து உயிர்காத்து ரட்சிப்பாயே10

 

அத்திமுகனே முக்கண்ணனுக்கு இளைய வேலா

அறுமுகனே தணிகையிலே அமர்ந்த வாசா

வித்திறத்திற் பேசாத மூடன் நானும்

வேலவனே நின்னருளால் கவியைப் போல

பத்துமே பதிகமாய்ப் பாடிச் சொன்னேன்

என்மீதில் பிழைகள்மனம் பொறுத்தே யாள்வாய்

சத்தியமாய் உனைப்பணிந்தோம் எங்கள் அய்யா

சண்முகனே அடியாரை ரட்சிப் பாயே.11

 

அவனாசிப் பத்து

 

வற்றாத பொய்கை வளநாடு கண்டு

மலைமேலிருந்த குமரா அரோகரா

உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை

உமையாள் தனக்குமகனே

முத்தாடைதந்து அடியேனை யாளும்

முருகேசன் என்றனரசே!

வித்தார மாக மயில்மீ திலேறி

வரவேணு மென்றனருகே!   1

 

ஆலால முண்டோன் மகனாகி வந்து

அடியார் தமக்கும் உதவி

பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து

பயனஞ் செழுத்தை மறவேன்

மாலான வள்ளி தனைநாடி வந்து

வடிவாகி நின்ற குமரா!

மேலான வெற்றி மயில்மீ திலேறி

வரவேணு மென்றனருகே!   2

 

திருவாசல் தோறும் அருள்வே தமோத

சிவனஞ் செழுத்தைமறவேன்

முருகேசரென்று அறியார் தமக்கு

முதலாகி நின்றகுமரா

குருநாத சுவாமி குறமாது நாதர்

குமரேச(ர்) என்ற பொருளே!

மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி

வரமேணு மென்றனருகே!   3

 

உதிரந் திரண்டு பனியீர லுண்டு

உருவாசல் தேடிவருமுன்

ததிபோ லெழுந்த திருமேனி நாதர்

கடைவீடு தந்து மருள்வாய்

முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை

வடிவேல் எடுத்தகுமரா!

யதிராய் நடந்து மயில்மீ திலேறி

வரவேணு மென்றனருகே!   4

 

மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்

மலைவீடு தந்து மருள்வாய்

வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை

வடிவேல் எடுத்தகுமரா!

நன்றாக வந்து அடியேனை யாண்டு

நல்வீடு தந்தகுகனே!

கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி

வரவேணு மென்றனருகே!   5

 

நீலஞ் சிறந்த குறமாது வள்ளி

நின்பாகம் வைத்தகுமரா

காலனெழுந்து வெகுபூசை செய்து

கயிறுமெடுத்து வருமுன்

வேலும் பிடித்து அடியார் தமக்கு

வீராதி வீரருடனே

சாலப் பரிந்து மயில்மீ திலேறி

வரவேணு மென்றனருகே!   6

 

தலைகட்ட நூலின் நிழல்போல நின்று

தடுமாறி நொந்து அடியேன்

நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று

நெடுமூச் செறிய விதியோ

அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா

அடியேனை ஆளுமுருகா!

மலையேறி மேவுமயில்மீ திலேறி

வரவே ணுமென்றனருகே!   7

 

வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்

வயலூரில் செங்கை வடிவேல்

கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்

கடனென்று கேட்கவிதியோ?

வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி

தெய்வா னைக்குகந்த வேலா

நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி

வரவே ணுமென்ற னருகே!  8

 

விடதூத ரோடி வரும் போது உம்மை

வெகுவாக நம்பினேனே

குறமாது வள்ளியிடமாக வைத்து

மயிலேறி வந்தகுமரா

திடமாகச் சோலை மலைமீ தில்வாழும்

திருமால் தமக் குமருகா!

வடமா னபழநி வடிவேல் நாதா

வர வேணு மென்றனருகே!  9

 

ஓங்கார சக்தி உமைபால் குடித்து

உபதேச முரைத்தபரனே!

பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி

புஜமீ திருந்தகுகனே

ஆங்கார சூரர் படைவீடு சோர

வடிவேல் விடுத்த பூபா

பாங்கான வெற்றி மயில்மீ திலேறி

வரவேணு மென்றனருகே!   10

 

ஆறாறு மாறு வயதான போது

அடியேன் நினைத்தபடியால்

வேறேது சிந்தை நினையாம லுந்தன்

ஆசாரசங்கமருள்வாய்

அசுரேசர் போல யமதூத ரென்னைத்

தொட்டோட கட்ட வருமுன்

மாறாது தோகை மயில்மீ திலேறி

வரவேணு மென்றனருகே!   11

 

கையார உன்னைத் தொழுதேத்த மனது

கபடேது சற்றுமறியேன்

அய்யா உனக்கு ஆளாகும் போது

அடியார் தமக்கும் எளியேன்

பொய்யான காயம் அறவே ஒடுங்க

உயிர்கொண்டு போகவருமுன்

வையாளி யாக மயில்மீ திலேறி

வரவேணு மென்றனருகே!   12

 

ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி

யிந்தப் பிறப்பிலறியேன்

மாதாபி தாநீ மாயன் தனக்கு

மருகா குறத்திக ணவா

காதோடு கண்ணை யிருளாக மூடி

உயிர்கொண்டு போகவருமுன்

வாதாடி நின்று மயில்மீ திலேறி

வரவேணும் மென்றனருகே! 13

 

வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்

 

வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்

நாதாந்த முடிமேல் நான்மறைகள் போற்றும் வேல்

 

தேவியள் தந்த வேல் தேவர் மூவர் போற்றும் வேல்

குழந்தைக் குமாரவேல் குன்று தோறுமாடும் வேல்

பாலகனின் கைவேல் பாவவினை தீர்க்கும் வேல்

கந்தன் கதிர்வேல் கவலைகளைப் போக்கும் வேல்

வேல் வேல் வெற்றிவேல் தேவர்சிறை மீட்ட வேல்

வாரி வழங்கும் வேல் வள்ளல் குணம் கொண்ட வேல்

ஆடும்பரிவேல் ஆபரணம் தரித்த வேல்

அழகன் முருகன் வேல் அள்ளியள்ளித் தந்த வேல்

மின்னும் கதிர்வேல் சண்முகன் சதுர்வேல்

சங்கடங்கள் தீர்க்கும் வேல் சத்ருசங்கார வேல்

முத்துக்குமார வேல் முன்னின்று காக்கும் வேல்

வானோர் தொழுத வேல் ஞானம் அருளும் வேல்

 

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

 

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

அய்யா முருகா ஆடுகவே

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

அய்யா முருகா ஆடுகவே

 

ஆழிப் படுக்கை கொண்டோனின்

அருமை மருகா ஆடுகவே

ஊழி தாண்டி நிற்பானின்

உத்தமச் செல்வா ஆடுகவே

 

வாழும் மனிதர் யாவருக்கும்

வழிக்குத் துணையாம் வேலவனே

ஆளும் கவலை ஓடிடவே

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

 

ஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டு

அதற்கு வயிரக் கயிறுமிட்டு

கூடிடும் அடியார் ஆட்டிடவே

குமரா ஊஞ்சல் ஆடுகவே

 

பாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம்

பண்பாய் வாழ்ந்து உயர்ந்திடவே

வாடிடும் பயிர்கள் வளம் பெறவே

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

 

முன்னே பின்னே சென்றாலும்

மூளையில் ஒன்றி நின்றிடுமே

என்னே வாழ்க்கை என்றாலும்

எல்லாம் உன்னைச் சுற்றியதே

 

குன்றாக் குடியாய் எமைகாக்கும்

குன்றக் குடியின் வேலவனே

கண்ணே மணியே கதிர்வேலா

கவினார் ஊஞ்சல் ஆடுகவே

 

விண்ணவர் செல்வி தெய்வானை

வேடவர் மகளாம் வள்ளியுடன்

மண்ணகம் சுற்றும் மயிலேறி

மேதகு சேவற் கொடியாட

 

கொண்டிடுங் காதல் உணர்வோடு

கனிந்த நெஞ்சத் தூஞ்சலிலே

அன்புடன் ஏறி இனிதமர்ந்தே

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

 

மண்ணைப் பிளந்து பெரும்பேட்டில்

மாபெரும் அருளுடை வடிவுடனே

பெண்ணின் நல்லார் இருவருடன்

பெருமயில் ஏறி வந்தவனே

 

கண்ணே தெரியாக் காட்டிடையே

கலங்கித் தவிக்கும் எங்களுக்கே

உன்னால் வழியும் தெரிந்துயர

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

 

ஆறடி நெடிதாம் உருவுடனே

அடியார்பக்தி உறுவேற

பேரருள் கொண்டாய் பெரும்பேடா

பிள்ளைகள் நலிவினைப் போக்கிடவே

 

சீரடி வணங்கிட வந்துள்ளோம்

செல்வா அருளைத் தந்திடுவாய்

ஆரிருள் விலகி ஒளிபெறவே

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!

 

 என்னோடும் பேசு சாமிநாதா

 

ஈசனோடு பேசியது போதுமே

என்னோடும் பேசுசாமி நாதனே

ஆசையோடு தமிழெடுத்துப் பாடினேன்

ஐயாஉன் திருவடியை நாடினேன்

 

கண்சீறும் பொறியூறி பிறந்தவா

கமலத்தில் அன்று நீயும் தவழ்ந்தவா

தண்ணீரில் சளியுனக்குப் பிடிக்குமே

சரவணத்துப் பொய்கைவிட்டு எழுந்துவா

 

கடலோரம் நிற்பவனே சண்முகா

கடல் நீரால் உடல் அரிக்கும் அல்லவா

நடமாடும் மயிலேறி இங்குவா

நல்ல மனக் கோயிலுண்டு தங்கவா

 

குன்றத்திலே கல்யாணம் ஆனதால்

குவலயத்தை நீமறத்தால் நியாயமா

குன்றத்தையும் விட்டிறங்கி ஓடிவா

கொஞ்சு தமிழ் இசைகேட்டு ஆடிவா

 

பன்னிரண்டு கண்களாடுந் தெய்வமே

என்னை மட்டும் காணமனம் இல்லையோ

உன்னை விட்டு யாரை இனி நம்புவேன்

சண்முகனே என்னுடனே வம்புஏன்

 

ஒன்றிரண்டு விழியேனும் திறந்திடு

ஓரவிழிப் பார்வையேனும் புரிந்திடு

என்றுமுனை நம்பிநின்றேன் வரங்கொடு

ஏற்றமுடன் யான் வாழ வரங்கொடு.

 

 ஒயிலாட்டம்

 

கந்தனுக்கும் வேல் வேல்

முருகனுக்கும் வேல் வேல்

கந்தனுக்கும் வேல் வேல்

முருகனுக்கும் வேல் வேல்

 

பச்சை மயில் வாகனம்

பச்சை வள்ளி மோகனம்

கச்சை கட்டி ஆடுங்கடி ஒயிலாட்டம்

கால்மாறி ஆடுங்கடி மயிலாட்டம்(கந்தனுக்கும்)

 

தேவயானை கண்ணரசி

தேவேந்திரன் பெண்ணரசி

பூ மகளின் மருமகளே ஒயிலாட்டம்

புண்ணியத் தவசீலன் மயிலாட்டம்(கந்தனுக்கும்)

 

பச்சமலை பவளமலை

இச்சை மலை பழநிமலை

இன்பமலை எமது நிலை ஒயிலாட்டம்

ஏகபோக தரிசனமாம் மயிலாட்டம்(கந்தனுக்கும்)

 

தங்கப்புள்ளி அங்கமது

தாவித் தாவி ஆடுமது

எங்களது முருகனுக்கு ஒயிலாட்டம்

எல்லையற்ற பேரழகே மயிலாட்டம்(கந்தனுக்கும்)

 

கொண்டை குலுங்குதடி

கூவியே ஆடுதடி

மண்டலமே மயங்குதடி ஒயிலாட்டம்

மாலவனும் மயங்குகிற மயிலாட்டம்(கந்தனுக்கும்)

 

முத்து நகை மோக நகை

பித்துநகை பெரியநகை

சித்துகளாம் செந்திலவன் ஒயிலாட்டம்

சிங்கார வேலனுக்கு மயிலாட்டம்(கந்தனுக்கும்)

 

குலுங்கிச் சிரிக்குமிந்தக்

குழந்தை ஏறி நின்று

அலுங்காமல் ஆடுதய்யா ஒயிலாட்டம்

ஆனந்த காட்சியம்மா மயிலாட்டம்(கந்தனுக்கும்)

 

சலங்கை குலுங்குதம்மா

சங்கீதம் பாடுதம்மா

நலுங்காய் ஒலிக்குதம்மா ஒயிலாட்டம்

நாயகனின் பேரருளே மயிலாட்டம்(கந்தனுக்கும்)

 

உடம்புக்கள் ஆடுவதும்

உயிராகக் கூடுவதும்

கடம்பனின் பேரருளே ஒயிலாட்டம்

கந்தனின் பேரழகே மயிலாட்டம்(கந்தனுக்கும்)

 

விராலிமலை பழநிமலை

விரும்புகின்ற ஆறுபடை

வெற்றியுடன் ஆடுகின்ற ஒயிலாட்டம்

வேண்டுவரம் தந்திடுமே மயிலாட்டம்(கந்தனுக்கும்)

 

பன்னீர் மணக்குதய்யா

கண்ணீர் பெருகுதய்யா

எந்நேரம் நீவருவாய் ஒயிலாட்டம்

எல்லையிலாப் பேரழகே மயிலாட்டம்(கந்தனுக்கும்)

 

சிந்துகளோ செந்தூரோ

முத்துங்களே பக்தர்களே

வந்துவந்து ஆடுகின்றான் ஒயிலாட்டம்

வரம்தரவே கூடுகின் மயிலாட்டம்(கந்தனுக்கும்)

 

தந்தனத்தான் பாடுகின்றான்

தாளமிட்டுக் கூடுகிறான்

கந்தனவன் ஆடுகின்றான் ஒயிலாட்டம்

கற்பனையை பாடுங்களே மயிலாட்டம்(கந்தனுக்கும்)

 

-நாச்சியப்பன்

 

 

ஹர ஹர சுப்ரமண்யம்

 

சுப்ரமண்யம் சுப்ரமண்யம்

ஷண்முகநாதா சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம்

சபரிகிரீசா சுப்ரமண்யம்

 

ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்

சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்

 

ஹர ஹர சிவ சிவ சுப்ரமண்யம்

சிவ சிவ ஹர ஹர சுப்ரமண்யம்

 

குஹ சரவண பவ சுப்ரமண்யம்

குரு சரவண பவ சுப்ரமண்யம்

 

சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்

ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்

 

சிவ சரவண பவ சுப்ரமண்யம்

சிவ சரவண பவ சுப்ரமண்யம்

 

முருகையா

 

பாசி படர்ந்த மலை முருகையா

பங்குனித்தேர் ஓடும் மலை முருகையா

ஊசி படர்ந்த மலை முருகையா

உருத்திராக்ஷம் காய்க்கும் மலை முருகையா

 

மலைக்குள் மலை நடுவே முருகையா

மலையாள தேசமப்பா முருகையா

மலையாள தேசம் விட்டு முருகையா

மயிலேறி வருவாயிப்போ முருகையா

 

அந்த மலைக்குயர்ந்த மலை முருகையா

ஆகும் பழநி மலை முருகையா

எந்த மலையைக் கண்டு முருகையா

ஏறுவேன் சந்நிதி முன் முருகையா

 

ஏறாமல் மலை தனிலே முருகையா

ஏறி நின்று தத்தளிக்க முருகையா

பாராமல் கைகொடுப்பாய் முருகையா

பழநிமலை வேலவனே முருகையா

 

வேலெடுத்து கச்சை கட்டி முருகையா

விதவிதமாய் மயிலேறி முருகையா

கோலா கலத்துடனே முருகையா

குழந்தை வடிவேலவனே முருகையா

 

உச்சியில் சடையிருக்க முருகையா

உள்ளங்கை வேலிருக்க முருகையா

நெற்றியில் நீறிருக்க முருகையா

நித்தமய்யா சங்குநாதம் முருகையா

 

தேரப்பா தைப்பூசம் முருகையா

தேசத்தார் கொண்டாட முருகையா

இடும்பன் ஒரு புறமாம் முருகையா

இருபுறமும் காவடியாம் முருகையா

 

ஆற்காட்டு தேசத்திலே முருகையா

ஆறு லட்சம் காவடிகள் முருகையா

தென்னாட்டு சீமையிலே முருகையா

தேசமெங்கும் காவடிகள் முருகையா

 

கடம்ப வனங்கண்டு முருகையா

காட்சிதர வருவாயிப்போ முருகையா

பாவிநான் என்றுசொல்லி முருகையா

பாராம லிருக்கிறாயோ முருகையா

 

பழநி நான் வருகிறேனே முருகையா

பார்த்துவரம் தந்திடுவாய் முருகையா

 

ஹர ஹர சுப்ரமண்யம்

 

சுப்ரமண்யம் சுப்ரமண்யம்

ஷண்முகநாதா சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம்

சபரிகிரீசா சுப்ரமண்யம்

 

ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்

சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்

 

ஹர ஹர சிவ சிவ சுப்ரமண்யம்

சிவ சிவ ஹர ஹர சுப்ரமண்யம்

 

குஹ சரவண பவ சுப்ரமண்யம்

குரு சரவண பவ சுப்ரமண்யம்

 

சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்

ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்

 

சிவ சரவண பவ சுப்ரமண்யம்

சிவ சரவண பவ சுப்ரமண்யம்

 

மயிலே மயிலே நீ ஆடு

 

மயிலே மயிலே நீ ஆடு

மயிலே மயிலே நீ ஆடு-எங்கள்

மன்னவன் புகழை நீ பாடு

 

மயிலே மயிலே நின்றாடு

மன்னவன் முருகனை மன்றாடு

தென்னவன் மகிழ்ந்திட நீ பாடு

சேவற்கொடியுடன் சேர்ந்தாடு!

 

செந்தமிழ் கீதம் நான் பாட

சந்தனக் காவடி தானாட

இந்திரன் கொலுவில் மீனாட

தந்தன தாளங்கள் சேர்ந்தாட

 

கல்லும் மரமும் கனிந்தாட

காவிரி வெள்ளம் புரண்டோட

உள்ளும் புரமும் ஒன்றாக

புள்ளி மயிலே நின்றாடு!

 

துன்புரு நாரதர் வந்தாட

துவாரகை கண்ணன் குழலூத

பண்பாய் வேலவன் கலந்தாட

படை வீடாற்றிலும் நின்றாடு

 

தங்கச் சரப்பளி பூண்டவனை

தணிகை மாமலை ஆண்டவனை

திங்களை அணிந்தோன் திருமகனை

தினமும் போற்றி நின்றாடு!

 

கலைமகள் நாவில் கனிந்தாட

நிலைமகள் தரையில் புரண்டாட

அலைமகள் அச்சுத னுடனாட

மலைமகள் சரவணன் விளையாட

 

சரவணப் பொய்கையில் நானாட

சண்முக நதியினில் அவனாட

வையாபுரியில் நீயாட

வருவான் சரவணன் விளையாட

 

குயில்கள் பாடும் குரலோசை

கோகுல கிருஷ்ணன் குழலோசை

பஜனை பாடும் பண் ஓசை

பழநிக் கோயில் மணியோசை

 

பாடலைப் படித்தால் பலனுண்டு

படிப்பதைக் கேட்டால் நலமுண்டு

தினமும் படித்தால் செல்வமுண்டு

பழநி முருகனின் அருளுண்டு

 

-எஸ். இராஜலெக்ஷ்மி, காரைக்குடி.